2020 பல்கலைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை ஏப்ரல். 09 வரை நீடிப்பு

2020ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை ஏப்ரல் 09 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மாணவர்களைப் பதிவு செய்வதற்கான கால எல்லை மார்ச் மாதம் 26ஆம் திகதி வரை என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த கால எல்லை மேலும் 2 வாரங்களினால் நீடிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலமைகளின் அடிப்படையில், 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவை எதிர்பார்த்துள்ள எந்தவொரு மாணவரும் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் இந்த கால எல்லையை மேலும் நீடிப்பதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயார் என, அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் (www.ugc.ac.lk) ஊடகங்கள் மூலமாகவும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார். இவ்விண்ணப்பத்தை Online மூலம் (admission.ugc.ac.lk) மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
(thinakaran)